என் உயிர் உள்ளவரை ஜெயலலிதா பிறந்தநாளில் இலவச திருமணத்தை நடத்துவேன் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு


என் உயிர் உள்ளவரை ஜெயலலிதா பிறந்தநாளில் இலவச திருமணத்தை நடத்துவேன் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 18 Feb 2019 4:45 AM IST (Updated: 17 Feb 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

என் உயிர் உள்ளவரை ஜெயலலிதா பிறந்தநாளில் இலவச திருமணத்தை நடத்துவேன் என வைத்திலிங்கம் எம்.பி. பேசினார்.

தஞ்சாவூர்,

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 71–வது பிறந்தநாளையொட்டி தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 127 ஜோடிகளுக்கு இலவச திருமணம் தஞ்சை திலகர் திடலில் நேற்றுகாலை நடந்தது. திருமண விழாவுக்கு துணை ஒருங்கிணைப்பாளரும், தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

எம்.ஜி.ஆர். எப்படி ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தாரோ? சினிமா நடிகராக இருக்கும் போது ஏழை மக்களுக்கு வாரி, வாரி வழங்கினார். முதல்–அமைச்சர் ஆனதும் சத்துணவு திட்டம் உள்ளிட்ட சரித்திரமிக்க திட்டங்களை செயல்படுத்தினார். அவர் வழியில் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்காக மடிக்கணினி, மிதிவண்டி, தாலிக்கு தங்கம், ஸ்கூட்டர் என அற்புதமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்.


ஜெயலலிதா வழியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இன்றைக்கு நல்லாட்சி நடத்தி வருகின்றனர். ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல்பரிசாக ரூ.1000–மும், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் அறிவித்து இருக்கிறார்கள். தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 1 பவுன் வழங்கப்படுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய வழியில் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது.

எனக்கென்று யாரும் இல்லை. உற்றார், உறவினர் என யாருமே எனக்கு இல்லை. எல்லாமே தமிழக மக்கள் தான். அவர்களுக்காக தான் வாழ்கிறேன் என்று ஜெயலலிதா சொன்னார். அவரது பிறந்தநாளில் 97–ம் ஆண்டு முதல் திருமணத்தை நடத்தி கொண்டு இருக்கிறோம். அவர் வாழும்போதும் நடத்தினோம். இன்றைக்கு மறைந்து தெய்வமாக இருக்கும்போதும் நடத்துகிறோம். என் உயிர் உள்ளவரை ஜெயலலிதாவின் பிறந்தநாளில் இதுபோன்று திருமணத்தை நடத்துவேன். மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும். ஜெயலலிதாவின் ஆசி எப்போதும் மணமக்களுக்கு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


அமைச்சர் துரைக்கண்ணு பேசும்போது, ஜெயலலிதா வழியில் அமைதி, வளம், வளர்ச்சி கண்டு முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் பொற்கால ஆட்சியை நடத்தி வருகின்றனர். இந்த ஆட்சி 2 ஆண்டுகளை கடந்து 3–வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழகம் சீரும், சிறப்புமாக இருக்கிறது. இந்த நேரத்தில் 127 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும்காலத்திலும் கட்சியும், ஆட்சியும் சீரும், சிறப்புமாக இருக்கும். மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்றார்.


அமைச்சர் காமராஜ் பேசும்போது, ஜெயலலிதா இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது பிறந்தநாள் விழா சாதாரண பாமரமக்களுக்கான விழாவாக கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதா எப்படி ஆட்சியை வழிநடத்தினாரோ அதேபோல முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் தலைமை தாங்கி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். ஏழை, எளிய மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர். மணமக்கள் சிறப்பான வாழ்வை வாழ வேண்டும் என்றார்.

Next Story