ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் அசோக்குமார் எம்.பி., கலெக்டர் பிரபாகர் திறந்து வைத்தனர்


ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் அசோக்குமார் எம்.பி., கலெக்டர் பிரபாகர் திறந்து வைத்தனர்
x
தினத்தந்தி 18 Feb 2019 3:30 AM IST (Updated: 17 Feb 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை அசோக்குமார் எம்.பி., கலெக்டர் பிரபாகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஓசூர், 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் 2-ம் போக பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, செயற்பொறியாளர் மெய்யழகன், உதவி செயற்பொறியாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்தனர்.

பின்னர், கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க கெலவரப்பள்ளி அணையிலிருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் 2-ம் போக பாசனத்திற்காக சுழற்சி முறையில், 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணையின் இடதுபுற பிரதான கால்வாய் மூலம் 5,918 ஏக்கரும், வலது பிரதான கால்வாய் மூலம் 2,082 ஏக்கரும் என மொத்தம் 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்கள் பயனடைகின்றன. இதன் மூலம் ஓசூர் மற்றும் சூளகிரி தாலுகாவில் உள்ள தட்டகானபள்ளி, பூதிநத்தம், சின்ன முத்தாளி, பெரிய முத்தாளி, அட்டூர், கதிரேபள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனபள்ளி, தொரப்பள்ளி உள்ளிட்ட 22 கிராமங்கள் பயன்பெறும்.

அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர் வரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு 90 நாட்களுக்கு சுழற்சி முறையில், முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தும், அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், 6 நனைப்புகளுக்கு நீர் வழங்கப்படும். திறந்து விடப்படும் நீரை, விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி, அதிக விளைச்சலை பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் சிவசங்கர், பொன்னிவளவன், வற்குணம், ராதிகா மற்றும் கெலவரப்பள்ளி அணை ஆயக்கட்டு தலைவர்கள் பிரகாஷ், நாராயணசாமி, ஓசூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன், ஓசூர் ஒன்றிய துணைத்தலைவர் ஜெயராம், முன்னாள் ஓசூர் நகராட்சி கவுன்சிலர்கள் அசோகா, சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story