அரூர் அருகே டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்த 2 பேர் கைது
அரூர் அருகே டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு ரூ.1.30 லட்சத்தை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரூர்,
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள நரிப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மகரஜோதி (வயது 42). இவர் சிக்கலூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் விற்பனை முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு, வசூலான ரூ.1.30 லட்சத்தை பையில் வைத்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றார்.
நரிப்பள்ளியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த 3 பேர் கும்பல் மகரஜோதி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பலில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் மகரஜோதியை சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கையால் தடுக்க முயன்றார். அப்போது தோட்டாக்கள் மகரஜோதியின் தோள் பட்டை பகுதியில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் அவர் சுருண்டு விழுந்தார்.
உடனே அந்த கும்பலை சேர்ந்த 3 பேரும், மகரஜோதி பையில் வைத்திருந்த ரூ.1.30 லட்சத்தை கொள்ளை அடித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கோட்டப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், விரைந்து வந்து மகரஜோதியை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன் பேரில் தனிப்படை போலீசார் நரிப்பள்ளி, சிக்கலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது வனப்பகுதியில் பதிவு எண் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் சோதனை நடத்தினர். அப்போது பையில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் கைத்துப்பாக்கி, 4 தோட்டாக்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சின்னதுரை மகன் வெங்கடேசன் (28), நாகேஸ்வரன் மகன் பரதன் (24) என்பதும், டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம், கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொருவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story