தனித்தனி சம்பவத்தில், விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை
தனித்தனி சம்பவத்தில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திருக்கோவிலூர்,
அரகண்டநல்லூர் அருகே உள்ள சித்தாத்தூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 58). கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் தங்கவேலின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த தங்கவேல் சம்பவத்தன்று, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தங்கவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தங்கவேல் மகன் தினகரன் அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர் அருகே உள்ள பழைய கருவாட்சியை சேர்ந்தவர் முருகன்(51). சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட முருகனின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முருகன் மகன் ரஞ்சித் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் பூமாலை மகன் சின்னதுரை(38). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது நிலத்தில் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சின்னதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி வெண்ணிலா வரஞ்சரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதுரை உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story