கிளன்ராக் வனப்பகுதியில், ஆதிவாசி வீடுகளுக்கு மின்சார வசதி
கிளன்ராக் வனப்பகுதியில் ஆதிவாசி வீடுகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டு உள்ளது.
பந்தலூர்,
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிளன்ராக் வனப்பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். பந்தலூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் கிளன்ராக் உள்ளது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கு வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை வசதிகள் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை. மேலும் மின்சார வசதியும் கிடையாது. இதனால் தங்கள் பகுதியில் மின்சாரம் உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு அனுமதியின் பேரில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மூலம் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த சில மாதங்களாக கிளன்ராக் ஆதிவாசி மக்களின் வீடுகளுக்கு மின்சார வசதி வழங்கும் பணியில் மின்சாரத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இதையொட்டி அங்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் மணி, மாவட்ட மேற்பார்வை பொறியாளர் பிரேம்குமார் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் உப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மேங்கோரேஞ்சு வழியாக கிளன்ராக் ஆதிவாசி கிராமத்துக்கு 69 மின்கம்பங்கள் நடும் பணி நடைபெற்றது. மேலும் இடைப்பட்ட பகுதியில் மின்மாற்றியும் பொருத்தப்பட்டு பணிகள் முழுமை பெற்றது.
இதனால் ஆதிவாசி மக்களின் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பொறியாளர் மணி மின்மாற்றியின் பொத்தானை அழுத்தி மின்வினியோகத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஆதிவாசி மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
மேலும் இலவச மின்சாரம் வழங்குவதற்கான ஆணைகளையும் ஆதிவாசி மக்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் வழங்கினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மின்சார வசதி கிடைத்து உள்ளதால், ஆதிவாசி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் தேவராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சிவக்குமார், மாறன், உதவி செயற்பொறியாளர்கள் தமிழ்அரசன், சின்னராஜா, முகவர்கள் ஜோசப், மேத்யூ செரியன் மற்றும் ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story