பயணிகளின் கோரிக்கையை ஏற்று கோவை-மேட்டுப்பாளையம் இடையே ஞாயிற்றுக்கிழமையும் ரெயில் சேவை
பயணிகளின் கோரிக்கையை ஏற்று கோவை-மேட்டுப்பாளையம் இடையே நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமையும் ரெயில் சேவை தொடங்கியது.
கோவை,
கோவை-மேட்டுப்பாளையம் இடையே ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கோவை-மேட்டுப்பாளையம் இடையே ஞாயிற்றுக்கிழமையும் ரெயில் இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், மத்திய ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து கோவை-மேட்டுப்பாளையம் இடையே ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரெயிலை இயக்க மத்திய ரெயில்வே மந்திரி உத்தரவிட்டார்.
அதன்படி கோவை ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நேற்று ரெயில் (எண் 56145) சேவை தொடங்கியது. இந்த ரெயிலை ஏ.பி.நாகராஜன் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ரெயில்வே கமிட்டி உறுப்பினர் தங்கவேல் பாண்டியன், ரெயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த ஜமீல், ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. எனவே ஞாயிற்றுக்கிழமையும் ரெயில் இயக்க வலியுறுத்தி வந்தோம். அதன்படி தற்போது மேட்டுப்பாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமையும் ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த தென்னக ரெயில்வே பொதுமேலாளர், சேலம் கோட்ட மேலாளர் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.
இதேபோல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நேற்று காலை கோவைக்கு ரெயில் (எண் 56146) இயக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மக்கள் நலப்பேரவை அமைப்பாளர் டி.டி.அரங்கசாமி, நகரமன்ற முன்னாள் தலைவர் டி.சதீஷ்குமார் ஆகியோர் ரெயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
இதில் ரெயில் நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் முகமது அஸ்ரப், வணிக மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஹபிபுல்லா, ஸ்டீபன், ஜெயகுமார், ராஜன், சுகுமாரன், சாந்தி, பா.ஜனதா நகர மகளிர் அணி தலைவி லதா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பெருமாள், கேரள சமாஜம் தலைவர் ஹம்சா, குமார், பாலகிருஷ்ணன், கைரளி நலச்சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story