அடிக்கடி விபத்து ஏற்படுவதை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


அடிக்கடி விபத்து ஏற்படுவதை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2019 10:15 PM GMT (Updated: 17 Feb 2019 6:27 PM GMT)

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்குகடற்கரை சாலை பஸ்நிறுத்தம் அருகே நேற்றுமுன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் அங்கிருந்த தடுப்புகள் மீது மோதியது.

பின்னர் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த மின்கம்பம் மீது மோதி கார் நின்றது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேர் அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களுடன் உயிர்தப்பினர்.

விபத்து காரணமாக மின்கம்பம் உடைந்ததால் அந்தபகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதனால் கடம்பாடி பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்ததே மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு காரணம் என்பது மக்களுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட கடம்பாடி ஊர் பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் கூடினர். இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து பலர் உயிரை இழக்கிறார்கள்.

எனவே கூடுதல் சாலை பாதுகாப்பு தேவை என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் அம்பாள்நகர் திருக்கழுக்குன்றம் வழியாகவும், சென்னைக்கு வரும் வாகனங்கள் வெங்கம்பாக்கம், திருக்கழுக்குன்றம் வழியாகவும் மாற்றி விடப்பட்டன.

பின்னர் மாமல்லபுரம் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின் ஊழியர்களை அழைத்து மின்கம்பத்தை சரி செய்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story