பள்ளி மாணவி கொலை: ‘கற்பழித்ததை தந்தையிடம் கூறிவிடுவதாக மிரட்டியதால் கொன்றோம்’ கைதான வாலிபர் வாக்குமூலம்


பள்ளி மாணவி கொலை: ‘கற்பழித்ததை தந்தையிடம் கூறிவிடுவதாக மிரட்டியதால் கொன்றோம்’ கைதான வாலிபர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 18 Feb 2019 4:45 AM IST (Updated: 18 Feb 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

கற்பழித்ததை தந்தையிடம் கூறி விடுவதாக மிரட்டியதால் பள்ளி மாணவியை கொன்றதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கீச்சலம் அருகே உள்ள புதுவெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி 5 மாதங்களுக்கு முன்பு மாயமானார். இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள ஓடையில் மாணவியின் எலும்புகள் மற்றும் மாயமான அன்று மாணவி அணிந்திருந்த பள்ளி சீருடைகள், அணிகலன்கள் கிடைத்தன.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை கற்பழித்து கொலை செய்ததாக வாலிபர் சங்கரய்யா மற்றும் நாதமுனி, கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராஜ், ஜெகதீஷ் என்கிற ஜெகதீஷ் பாபு ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை குறித்து சங்கரய்யா போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

சம்பவம் நடந்த அன்று கரும்பு தோட்டம் வழியாக தனியாக வந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி, மாந்தோப்பில் இருந்த நாதமுனி வீட்டிற்கு அழைத்து சென்றேன். ஏற்கனவே நாதமுனி சிறு வயது பெண்ணை உல்லாசம் அனுபவிக்க ஆசைப்படுவதாக என்னிடம் கூறினார். அதற்கு ரூ.5 ஆயிரம் தருவதாக கூறினார்.

அதற்கு நான் ஒரு சிறுமி இருக்கிறாள். அவளை அழைத்து வருவதாக கூறினேன். அதன்பிறகு மாணவியை அழைத்து சென்றேன். அங்கு 4 பேரை கண்டதும் மாணவி பயந்தாள். நான் பயப்படாதே அவர்கள் என் நண்பர்கள் என்று கூறி அவளை அங்கு விட்டு சென்றேன். அவளை முதலில் நாதமுனியும், பிறகு மற்றவர்களும் கற்பழித்தனர்.

மறுநாள் மாணவியை நானும் கற்பழித்தேன். இப்படி 5 நாட்கள் கடந்த பிறகு மாணவியை வீட்டிற்கு போ நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொன்னேன். அதற்கு அவள் தனது தந்தையிடம் தெரிவிப்பேன் என்று மிரட்டினாள். இதனால் எங்களுக்கு பயம் ஏற்பட்டது.

எனவே அங்கிருந்த கத்தியை எடுத்து நாதமுனி, மாணவியின் கழுத்தில் பலமுறை வெட்டினார். இதில் மாணவி இறந்தாள். பின்னர் மாணவியின் உடலில் உடைகள் அணிவித்து இரவு 9 மணியளவில் ஓடையில் பள்ளம் வெட்டி புதைத்து விட்டோம். சில நாட்கள் கழித்து நாதமுனி என்னிடம் ஊர் நிலவரம் குறித்து கேட்டார்.

நான் மாணவியின் தந்தை போலீசில் புகார் கொடுத்து இருப்பதாக தெரிவித்தேன். எந்த காரணத்தை கொண்டும் அவரை பற்றி வெளியில் கூறக்கூடாது என்று சொன்னார். இவ்வாறு சங்கரய்யா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Next Story