தஞ்சை அருகே கார் மோதி பெண் உள்பட 2 பேர் சாவு திருமணத்துக்கு வந்தபோது பரிதாபம்


தஞ்சை அருகே கார் மோதி பெண் உள்பட 2 பேர் சாவு திருமணத்துக்கு வந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 18 Feb 2019 3:45 AM IST (Updated: 18 Feb 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே திருமணத்துக்கு வந்த பெண் உள்பட 2 பேர் கார் மோதி இறந்தனர்.

தஞ்சாவூர்,

திருச்சி கள்ளர்தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி கவுரி(வயது56). இவர் தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த உறவினரின் திருமணத்தில் பங்கேற்க நேற்றுமுன்தினம் வந்திருந்தார். அதேபோல புதுக்கோட்டை வெங்கடேஸ்வராநகர் 4-வது தெருவை சேர்ந்த கருப்பையா(55),டாக்டர் அம்பேத்கர் ரோட்டை சேர்ந்த மாரிமுத்து(65) ஆகியோரும் அந்த திருமணத்தில் பங்கேற்க வந்திருந்தனர்.

திருமணம் முடிந்தவுடன் மாலையில் ஊருக்கு செல்வதற்காக இந்த 3 பேரும் திருமண மண்டபம் எதிரே சாலையோரம் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து பாபநாசம் அருகே உள்ள உடையார்கோவிலை நோக்கி சென்ற கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 3 பேர் மீதும் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுரி, கருப்பையா ஆகியோர் இறந்தனர். மாரிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான உடையார்கோவிலை சேர்ந்த ரமணியை(48) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story