ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பு: தூத்துக்குடியில் 1,600 போலீசார் குவிப்பு


ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பு: தூத்துக்குடியில் 1,600 போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2019 4:00 AM IST (Updated: 18 Feb 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்புக்காக 1,600 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்புக்காக 1,600 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.

இதைத்தொடர்ந்து அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டு, ஆலை மூடப்பட்டது.

இன்று தீர்ப்பு

இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை அமல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது. இந்த மனு மற்றும் அரசின் மேல்முறையீடு மனு ஆகியவை சேர்த்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கடந்த வாரம் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.

போலீசார் குவிப்பு

இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் உச்சகட்ட பரபரப்பு காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து நகரில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் முரளிரம்பா (தூத்துக்குடி), அருண்சக்திகுமார் (நெல்லை), நெல்லை மாநகர துணை ஆணையர் சுகுணாசிங் ஆகியோர் தலைமையில் 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்காக நேற்று மாலை முதல் நெல்லை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, மதுரை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த போலீசார் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் நேற்று மாலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து சிப்காட், கலெக்டர் அலுவலகம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று இரவு முதல் பாதுகாப்பு பணியை தொடங்கினர். அதே போன்று தூத்துக்குடி நகருக்குள் வரக்கூடிய அனைத்து சாலைகளிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடத்துவதற்கான பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் தூத்துக்குடி நகர் முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

Next Story