ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்: தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆசியா மரியம் அறிவிப்பு
மத்திய அரசின் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு அறிவித்த பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில், அவ்விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.
கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரித்து வரப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் 4.99 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருந்து, அதில் பயிர் செய்தவர்களுக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.
முதல் தவணை தொகையை நாளை மறுநாளுக்குள் (புதன்கிழமை) விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் என்றால் கணவன், மனைவி, மைனர் வாரிசு ஆகியோர் அடங்கிய குடும்பமாக இருக்க வேண்டும்.
தகுதியான விவசாயிகள் தங்களது பெயர், வயது (பிறந்த தேதி) பாலினம், வகுப்பு, ஆதார் எண், வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி. கோடு எண், குடும்ப அட்டை எண், செல்போன் எண் மற்றும் விவசாய நிலத்தின் பட்டா, சிட்டா நகல் ஆகிய விவரங்களுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்க வேண்டும். விவசாயம் செய்யும் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர்கள், தற்்போது பணிபுரிந்து வருபவர்கள் (எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்) ஆகியோருக்கு இந்த திட்ட நிதிஉதவி கிடைக்காது.
மத்திய, மாநில அரசு பணிகளில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள், மாத ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமாக பெறுபவர்கள், கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்கள், டாக்டர், வக்கீல், ஆடிட்டர்கள், என்ஜினீயர்கள் உள்பட தொழில்முறை பணிபுரிபவர்களுக்கும் இந்த நிதி உதவி கிடையாது.
குடும்பத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். எனவே, அனைத்து விவசாயிகளும் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலரிடம் உரிய விண்ணப்ப படிவத்தையும், சுய உறுதிமொழி படிவத்தையும் கொடுத்து இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story