நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி கொலை?


நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி கொலை?
x
தினத்தந்தி 18 Feb 2019 3:00 AM IST (Updated: 18 Feb 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமகிரிப்பேட்டை, 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே அரியாகவுண்டம்பட்டி மணியக்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் வரதராஜ் (வயது 51). விவசாயி. திருமணம் ஆகாதவர்.

இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் வரதராஜ் வீட்டில் படுத்து இருந்தார். நேற்று காலையில் அவருடைய தோட்டத்தில் வேலைசெய்யும் ஆறுமுகம் என்பவர் வரதராஜ் வீட்டுக்கு வந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது வரதராஜ் அங்கு இல்லை. ஆனால் வீட்டில் ஆங்காங்கே ரத்தக்கறை காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வெளியே வந்தார்.

பின்னர் இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பூங்கொடி மற்றும் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருள் அரசு, ராசிபுரம் துணை சூப்பிரண்டு விஜயராகவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். வரதராஜ் எங்கே? வீட்டில் ரத்தக்கறை ஏற்படுவதற்கு காரணம் என்ன? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் விசாரணையில், வரதராஜ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிணம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அது வரதராஜின் உடலா? என்பது பற்றி விசாரணை நடத்த போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story