கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதல்: தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் காயம்; வாலிபருக்கு தர்மஅடி


கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதல்: தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் காயம்; வாலிபருக்கு தர்மஅடி
x
தினத்தந்தி 18 Feb 2019 4:15 AM IST (Updated: 18 Feb 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஐ.சி.எப். சிக்னலில் தாறுமாறாக ஓடிய கார் மற்றொரு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதுடன் நடந்து சென்ற பெண் மீதும் மோதியது. இதில் அந்த பெண் காயம் அடைந்தார். காரை ஓட்டி வந்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

அம்பத்தூர்,

சென்னை அம்பத்தூரில் வசித்து வருபவர் கார்த்திகேயன் (வயது 26). இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி ஆகும். இவர், பாடியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கார்த்திகேயன், காரில் அம்பத்தூரில் இருந்து நியூ ஆவடி சாலை வழியாக அண்ணாநகர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஐ.சி.எப். சிக்னல் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், முன்னால் சென்ற மற்றொரு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதுடன், சாலையில் நடந்து சென்ற வில்லிவாக்கம் ஐ.சி.எப். பகுதியைச் சேர்ந்த திலகம் (45) என்ற பெண் மீது மோதி நின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், காரில் இருந்த கார்த்திகேயனுக்கு தர்மஅடி கொடுத்து, ஐ.சி.எப். போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி அவர்கள், திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்து, கார்த்திகேயனை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கார் மோதியதில் காயம் அடைந்த திலகம், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்தில் கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் லேசாக சேதம் அடைந்ததாக தெரிகிறது.

கார்த்திகேயன் மீது குடிபோதையில் கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story