விழுப்புரம் அருகே, போலீஸ் வாகனம் மோதி 3 பேர் பலி
விழுப்புரம் அருகே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு சென்றுவிட்டு திரும்பிய போலீஸ் வாகனம் மோதியதில் 3 பேர் பலியாகினர்.
விழுப்புரம்,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். பின்னர் புதுச்சேரியில் அந்த மாநிலத்தின் முதல்-அமைச்சர் நாராயணசாமி நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசுவதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரி மாநிலத்திற்கு புறப்பட்டார்.
இதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து மு.க.ஸ்டாலின் வழிக்காவலுக்காக போலீசார் தங்கள் வாகனத்தில் சென்றனர். இதனிடையே விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வரை மு.க.ஸ்டாலினின் பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஒரு போலீஸ் வாகனத்தில் புதுச்சேரிக்கு சென்றனர்.
புதுச்சேரியில் முதல்- அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து விட்டு அங்கிருந்து விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டார். அதன்பிறகு விழுப்புரத்தில் இருந்து சென்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் புதுச்சேரியில் இருந்து மாலையில் விழுப்புரம் புறப்பட்டனர். இவர்கள் வந்த வாகனத்தை விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் போலீஸ் டிரைவரான சரவணன் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த வாகனம், மாலை 5.30 மணியளவில் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டை கடந்து விழுப்புரம் மாவட்ட எல்லையான கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகில் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் வாகனம் தறிகெட்டு ஓடியது. அந்த சமயத்தில் எதிரே விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக தனித்தனியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் மீது கண் இமைக்கும் நேரத்தில் போலீஸ் வாகனம் மோதியது. மேலும் வலதுபுற சாலையோரம் சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்த மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி (வயது 60) என்பவர் மீதும் மோதிவிட்டு அங்குள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது.இந்த விபத்தில் மண்ணாங்கட்டி, மோட்டார் சைக்கிளில் வந்த கொண்டங்கியை சேர்ந்த முத்து மகன் பாபு(30), மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையான்குளத்தை சேர்ந்த காசிலிங்கம் மகன் திருமுருகன்(30) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் இந்த விபத்தில் போலீஸ் வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்தது. ஆனால் வாகனத்தை ஓட்டி வந்த சரவணன் மற்றும் அதிலிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வாகனத்தை வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், கெங்கராம்பாளையத்தில் இருந்து விழுப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் திரண்டனர். விபத்துக்கு காரணமான போலீஸ் வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுசம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான பாபு, கொத்தனார் ஆவார். அவர், ரசபுத்திரபாளையத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story