பொள்ளாச்சி அருகே, டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
பொள்ளாச்சி அருகே சமையல் கியாஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 36), லாரி டிரைவர். இவர், நேற்று அதிகாலை கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பொள்ளாச்சி அருகே பெரியகளந்தையில் உள்ள சமையல் கியாஸ் நிரப்பும் நிறுவனத்திற்கு டேங்கர் லாரியில் கியாஸ் ஏற்றி வந்தார்.
பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது ராசக்காபாளையம் அருகே லாரி வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், லாரியின் முன்பக்கம் சேதம் அடைந்தது. டிரைவர் மாரியப்பன் பலத்த காயமடைந்தார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் மற்றும் பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கியாஸ் கசிந்து ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என கருதிய போலீசார், தீயணைப்பு நிலைய அதிகாரி புருஷோத்தமன் ஆகியோர் டேங்கர் லாரி கவிழ்ந்து கிடக்கும் சாலை வழியாக வாகன ஓட்டிகள் செல்ல தடை விதித்தனர்.
இதற்காக ராசக்காபாளையம், கரப்பாடி பிரிவில் கயிறு கட்டினர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களை போலீசார் வேறு வழியில் மாற்றி விட்டனர். பொள்ளாச்சி, பல்லடத்திற்கு வாகனங்கள் செல்ல கரப்பாடி வழியாக வழி மாற்றி விடப்பட்டது. இதனால் ராசக்காபாளையம் சாலையில் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
மேலும், கியாஸ் கசிந்து விடாமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். பின், கவிழ்ந்து விழுந்த லாரியில் உள்ள சமையல் கியாஸை மற்றொரு டேங்கர் லாரியில் பாதுகாப்பாக மாற்றி பெரிய களந்தைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் கூறுகையில், அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்து கியாஸ் கசிவு ஏற்படவில்லை. கசிவு ஏற்பட்டு இருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். தீயணைப்புதுறையினர் மற்றும் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story