மேம்பாலம் அமைக்கும் பணி: கிரிவலம் செல்பவர்களுக்கு மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, கிரிவலம் செல்பவர்களுக்கு மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சிலர் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் செல்கின்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு பவுர்ணமியின் போது நகரின் எல்லைப் பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.
மாசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) இரவு 11.53 மணியளவில் தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 9.32 மணியளவில் நிறைவடைகிறது. இந்த பவுர்ணமிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து வரும் பக்தர்கள் திருவண்ணாமலை திண்டிவனம் சாலை வழியாக தான் வரவேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சாலையில் மேம்பாலம் அமைப்பதற்காக ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சிலர் அதில் இருக்கும் சிறு இடைவெளியை பயன்படுத்தி செல்கின்றனர். சிலர் கஷ்டப்பட்டு தங்கள் மோட்டார் சைக்கிள்களையும் கொண்டு வந்து தண்டவாளத்தை கடந்து நகருக்குள் வருகின்றனர்.
இன்று இரவு கிரிவலம் செல்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவராக இந்த இடைவெளியில் வந்தால் வீண் காலதாமதமும், பிரச்சினையும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மக்கள் முண்டியடித்து கொண்டு செல்லும் போது ரெயில் ஏதேனும் வந்தால் விபரீதம் ஏற்படும்.
எனவே மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி கிரிவலம் செல்ல வரும் பக்தர்களை திண்டிவனம் சாலையில் செல்ல விடாமல் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் இதனால் சில இடங்களில் பக்தர்கள் கொண்டு வரும் வாகனங்கள் நிறுத்த இடமின்றி சிரமம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே வாகனங்கள் நிறுத்தவும் கூடுதல் இடம் தேர்வு செய்து எந்தவித குழப்பமுமின்றி பக்தர்கள் கிரிவலம் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story