நாடாளுமன்ற தேர்தலில் “தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 16 தொகுதிகளை கேட்போம்” வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி
“நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளை கேட்போம்“ என காங்கிரஸ் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
நெல்லை,
“நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளை கேட்போம்“ என காங்கிரஸ் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
தலைவர்கள் சிலைகளுக்கு மாலை
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட வசந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர், இந்திரா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரியையும், செயல் தலைவராக என்னையும் நியமனம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அனைத்து காங்கிரஸ் கட்சி தொண்டர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திருச்சி கலைஞர் அரங்கத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, வெற்றி வாய்ப்புகள் பற்றி விவாதிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
16 தொகுதிகள்
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்புள்ள கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திருச்சி, தேனி, ஆரணி உள்ளிட்ட 16 தொகுதிகளை கேட்போம். கூடுதலாகவும் கிடைக்கலாம், குறைவாகவும் கிடைக்கலாம். அதை ராகுல்காந்தி முடிவு செய்வார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். இந்த முறை கன்னியாகுமரி, நெல்லை ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கிறேன். இதுபற்றி ராகுல்காந்தி முடிவு எடுத்து அறிவிப்பார்.
எங்களை பொறுத்த வரையில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றுவோம். மதவாதத்தை எதிர்த்து பிரசாரம் செய்வோம். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி தமிழகத்துக்கு வர உள்ளனர். சோனியா காந்தியும் பிரசாரத்துக்கு வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துரையாடல் கூட்டம்
பின்னர் வசந்தகுமாருக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுயர மாலை, மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கே.எம்.சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, சக்தி திட்ட நெல்லை கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story