பெருந்துறை அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி கணவன்– மனைவி சாவு


பெருந்துறை அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி கணவன்– மனைவி சாவு
x
தினத்தந்தி 17 Feb 2019 10:15 PM GMT (Updated: 17 Feb 2019 7:51 PM GMT)

பெருந்துறை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி கணவன் மற்றும் மனைவி பரிதாபமாக இறந்தனர். அவர்களுடைய மகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெருந்துறை,

கோவை மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர் பங்காரு (வயது 80). தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (70).

இந்த நிலையில் திருச்செங்கோட்டில் உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பங்காரு, ஜெயலட்சுமி, இவர்களுடைய மகள் ரேவதி (44), பேரன் பங்காரு சுதர்சனக்குமார் (22), பேத்தி அலமேலு பிரியதர்ஷினி ஆகியோர் ஒரு காரில் நேற்று சென்றனர். திருமணம் முடிந்ததும் அவர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை பங்காரு சுதர்சனக்குமார் ஓட்டினார். மாலை 4 மணி அளவில் கார் பெருந்துறை– குனத்தூர் ரோட்டில் கராண்டிபாளையம் பிரிவு அருகே சென்றபோது ரோட்டோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

இந்த விபத்தில் ஜெயலட்சுமி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த பங்காரு, ரேவதி, பங்காரு சுதர்சனக்குமார், அலுமேலு பிரியதர்ஷினி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் பங்காரு பரிதாபமாக இறந்தார்.

ரேவதி, பங்காரு சுதர்சனக்குமார், அலமேலு பிரியதர்ஷினி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பங்காரு, ஜெயலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள நடுப்பாளையம் முரளிக்காட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 53). நெசவு தொழிலாளி. இவருடைய மகள் நித்யா (17). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்–1 படித்து வருகிறார். நித்யாவுக்கு உடல்நிலை சரியில்லை.

இதனால் அவரை, சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மனோகரன் அழைத்துச்சென்றார். அங்கு சிகிச்சை பெற்றபின்னர் 2 பேரும் நடுப்பாளையம் நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

இந்த மோட்டார் சைக்கிள் வெள்ளோடு அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த ஆட்டோவும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மனோகரன் பரிதாபமாக இறந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் நித்யா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள புதூர் ஊஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி சுதா (வயது 28). சுரேஷ் பெருந்துறை அருகே உள்ள சிப்காட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சுதாவின் பெற்றோர் வீடு ஈங்கூரில் உள்ளது. நேற்று சுரேஷ் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு சுதாவின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் புதூர் ஊஞ்சப்பாளையத்துக்கு புறப்பட்டனர். பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர் ரோட்டில் மோட்டார்சைக்கிள் சென்று கொண்டு இருந்தது.

அப்போது மோட்டார் சைக்கிளின் முன்னால் லாரி ஒன்று சென்றது. இதில் சுரேஷ் அந்த லாரியை முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது சுதா லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். இதனால் அவர் தலைநசுங்கி, கணவர் கண்ணெதிரே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் எந்தவித காயமுமின்றி சுரேஷ் உயிர்தப்பினார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story