நெல்லையில் சி.பா.ஆதித்தனாருக்கு சிலை அமைக்க வேண்டும் காமராஜர் ஆதித்தனார் கழக கூட்டத்தில் தீர்மானம்
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாருக்கு நெல்லையில் சிலை அமைக்க வேண்டும் என்று காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை,
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாருக்கு நெல்லையில் சிலை அமைக்க வேண்டும் என்று காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகள் கூட்டம்
காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள் கூட்டம், உறுப்பினர் படிவம், அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நெல்லையில் நேற்று மாலையில் நடந்தது. தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமை தாங்கினார். பொது செயலாளர் மின்னல் அந்தோணி, இளைஞர் அணி செயலாளர் எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோபிதாஸ் வரவேற்று பேசினார்.
ஒழுங்கு கமிட்டி தலைவர் வயலா செல்வின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் படிவத்தை வழங்கினார். இதை மண்டல தலைவர் பால்பாண்டியன், தென்மண்டல அமைப்பு செயலாளர் கப்பல் ராஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
சி.பா.ஆதித்தனாருக்கு சிலை
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நெல்லை புதிய பஸ்நிலையம் அருகில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாருக்கு சிலை அமைக்க வேண்டும்.
பட்டாசு தொழிலை நம்பி சிவகாசி பகுதியில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் தற்போது தொழில் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். எனவே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடர்ந்து நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் முடிவை அரசு கைவிட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது. ஒகி மற்றும் கஜா புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை சரிசெய்ய வேண்டும். ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் அமைக்கப்படுகின்ற வளைவுக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராணுவ பயிற்சி
இதைத்தொடர்ந்து சிலம்பு சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில், தென் மாவட்டங்களில் சாதி பிரச்சினையை தூண்டிவிட்டு அரசியல் நடத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். அதை தடுத்து நிறுத்த வேண்டும். நாடார்கள் நடத்துகின்ற தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாய் நாட்டிற்காக உயிர் இழந்த 44 ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அவர்கள் பெயரில் டிரஸ்ட் அமைத்து இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும். தமிழக அரசு சென்னையில் உள்ள விளையாட்டு அரங்கத்திற்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக அரசு, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயரில் விருது வழங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவி ராணி, நிர்வாகிகள் ஜீவா, ஜெயசீலன், சுபாஷ், ரமேஷ், தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story