நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு என ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் கூறினார்.
நெல்லை,
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு என ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் கூறினார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு
சேலம் சங்ககிரியில் அருந்ததியினர் அரசியல் எழுச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சி அமையும் போது அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்துவோம் என்று உறுதி அளித்துள்ளார். இதை நாங்கள் வரவேற்கிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். அந்த கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம்.
தமிழகம் மட்டும் அல்லாமல், நாடு முழுவதும் மதவாத பிரச்சினைகள் தலைவிரித்து ஆடுகிறது. சில கட்சிகள் மதவாத பிரச்சினையை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் அடைய முயற்சி செய்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.
மணிமண்டபம்
பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரனார் மணிமண்டபத்தை புனரமைப்பு செய்ய வேண்டும். மேலும் அங்கு குதிரையுடன் உள்ள சிலையை பொதுமக்கள் பார்க்கும் வகையில் மணிமண்டபத்தின் வெளியே உள்ள வளாகத்தில் பீடம் அமைத்து அதற்கு மேல் கம்பீரமாக அமைக்க வேண்டும். மணிமண்டபத்தில் ஒண்டிவீரனாரின் வரலாற்று ஆவணங்களை கல்வெட்டாக பதிவு செய்ய வேண்டும். மணிமண்டபத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, பொதுச்செயலாளர் ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர் கார்த்திக், கிழக்கு மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story