பாதாள சாக்கடை நிரம்பி தெருக்களில் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் அவதி
பாதாள சாக்கடை நிரம்பி தெருக்களில் கழிவுநீர் ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் ரூ.40 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையொட்டி நகர் முழுவதும் சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அடைப்புகளை சரி செய்ய ஆங்காங்கே நூற்றுக்கணக்கான குழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தொட்டிகள் நிரம்பி கழிவுநீர் அனைத்தும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இவ்வாறு ராமநாதபுரம் வெளிப்பட்டினம் கொழும்பு ஆலிம் பள்ளிக்கூடம் அருகில் உள்ள தெரு, கான்சாகிப் தெரு, காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு போன்ற இடங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி வழிந்து தெருக்களில் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதிகளில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகரசபை அலுவலர்களிடம் தொடர்ந்து புகார் செய்த வண்ணம் உள்ளனர். எனவே பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கி கழிவுநீர் தெருக்களில் தேங்குவதை தடுக்க நகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.