நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதல், பொங்கலூரை சேர்ந்த தம்பதி பரிதாப சாவு


நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதல், பொங்கலூரை சேர்ந்த தம்பதி பரிதாப சாவு
x
தினத்தந்தி 18 Feb 2019 4:15 AM IST (Updated: 18 Feb 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பொங்கலூரை சேர்ந்த தம்பதி பரிதாபமாக இறந்தனர். அவர்களுடைய மகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெருந்துறை, 

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர் பங்காரு (வயது 80). தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (70).

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பங்காரு, ஜெயலட்சுமி, இவர்களுடைய மகள் ரேவதி (44), பேரன் பங்காரு சுதர்சனக்குமார் (22), பேத்தி அலமேலு பிரியதர்ஷினி ஆகியோர் ஒரு காரில் நேற்று சென்றனர். திருமணம் முடிந்ததும் அவர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை பங்காரு சுதர்சனக்குமார் ஓட்டினார். மாலை 4 மணி அளவில் கார் பெருந்துறை-குன்னத்தூர் ரோட்டில் கராண்டிபாளையம் பிரிவு அருகே சென்றபோது ரோட்டோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

இந்த விபத்தில் ஜெயலட்சுமி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த பங்காரு, ரேவதி, பங்காரு சுதர்சனக்குமார், அலுமேலு பிரியதர்ஷினி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் பங்காரு பரிதாபமாக இறந்தார்.

ரேவதி, பங்காரு சுதர்சனக்குமார், அலமேலு பிரியதர்ஷினி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பங்காரு, ஜெயலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story