கடந்த நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பே நிதி ஒதுக்கீடு: 5 வருடங்களாக கிடப்பில் கிடக்கும் நடை மேம்பால திட்டங்கள்


கடந்த நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பே நிதி ஒதுக்கீடு: 5 வருடங்களாக கிடப்பில் கிடக்கும் நடை மேம்பால திட்டங்கள்
x
தினத்தந்தி 18 Feb 2019 4:15 AM IST (Updated: 18 Feb 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர்- சாத்தூர் இடையே 4 வழிச்சாலையில் நடைமேம்பாலங்கள் அமைக்க கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே நிதிஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அத்திட்டப்பணி 5 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாமல் பாராமுகமாகவே உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் சாத்தூர் இடையே 4 வழிச்சாலையில் விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்புள்ள பகுதி மற்றும் படந்தால் விலக்கு ஆகிய பகுதிகளில் வாகன விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் 2014-ம் வருட தொடக்கத்தில் அப்போதைய எம்.பி. மாணிக்கம் தாகூர் விபத்துப்பகுதிகளில் நடைமேம்பாலங்கள் அமைக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு பெற்றார். இந்த நடைமேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதிப்பீடு தயாரித்து மண் பரிசோதனைகளை முடித்து திட்டப்பணி தொடங்க ஏற்பாடு செய்தது.

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதி இந்த நடைமேம்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு 2 தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதால் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்ததால் நடைமேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா ரத்துசெய்யப்பட்டதுடன் திட்டப்பணியும் தடைபட்டது. அந்த தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடைமேம்பால கட்டுமான பணி தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து இணை மந்திரியாக பொறுப்பேற்றிருந்த பொன்.ராதாகிருஷ்ணன் விருதுநகருக்கு ஆய்வுப் பணிக்காக வந்திருந்த போது நடைமேம்பாலம் கட்டுவதற்கான அவசியத்தை அவரிடம் வலியுறுத்தி கூறியதன் பேரில் அவரும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஆணைய அதிகாரிகள் மீண்டும் மண் பரிசோதனை செய்தனர். ஆனாலும் திட்டப் பணிகள் தொடங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாகவே இருந்துவிட்டனர்.

தற்போது 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் (மார்ச்) எந்நேரமும் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அதற்குள்ளாவது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் நடைமேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கிவிட்டால் தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் திட்டப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு நடைமேம்பாலங்களை கட்டி முடிக்க வாய்ப்பு ஏற்படும்.

கலெக்டர் அலுவலக வளாகம் முன்பும் படந்தால் விலக்கிலும் 4 வழிச்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்தினை தவிர்க்கவே இந்த நடைமேம்பாலங்கள் தேவைப்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி இத்திட்டப்பணிகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story