கல்விக் கடனுக்கான வட்டி குறைப்பு கலெக்டர் தகவல்
கல்வி கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் கூறியுள்ளார்.
விருதுநகர்,
கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:–
தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், கடனுக்கான குடும்ப வருமான உச்சவரம்பினை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 1½ லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தியும், வட்டி விகிதம் 1½ சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைத்து கல்விக்கடன் வழங்கவும் உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திரும்பி செலுத்த வேண்டிய தவணைத் தொகைக்கும் கால அவகாசம் வழங்கி கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி வருமான உச்சவரம்பு கிராமப்பகுதியில் ரூ. 98 ஆயிரத்திலிருந்து திருத்திய வருமான வரம்பு ரூ.3 லட்சம் எனவும், நகரப்பகுதியில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்திலிருந்து திருத்திய வருமான வரம்பு ரூ. 3 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கல்விக்கடன் திட்டத்தில் வட்டி விகிதம் தற்போதுள்ள வட்டி (ஒரு வருடத்திற்கு) 1 ½ சதவீதத்தில் இருந்து 1 சதவீதம் ஆக மாற்றப்பட்டுள்ளது.
சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு குழுவிற்கான அதிக பட்ச கடன் தொகை சுமார் ரூ. 10 லட்சம் வரை ஆகும். அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தற்போது ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.60ஆயிரம் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுக்காலக்கடன் திட்டத்தின் கீழ் திரும்ப செலுத்தும் கால வரம்பு 5 வருடத்திலிருந்து 8 வருடமாகவும், கல்விக்கடன் 5 வருடத்திலிருந்து 15 வருடமாகவும், பெண்களுக்கான புதிய ஸ்வர்னிமா திட்டத்தில் 5 வருடத்திலிருந்து 8 வருடமாகவும், ஆண்களுக்கான சிறுகடன் வழங்கும் திட்டம் 3 வருடத்திலிருந்து 4 வருடமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கான மகிளா சம்ரிதி யோஜனா திட்டம் 3 வருடத்திலிருந்து 4 வருடமாக கால உச்சவரம்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.