வாழப்பாடி அருகே கியாஸ் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி மேம்பாலம் கட்ட கோரி பொதுமக்கள் சாலை மறியல்


வாழப்பாடி அருகே கியாஸ் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி மேம்பாலம் கட்ட கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Feb 2019 9:45 PM GMT (Updated: 17 Feb 2019 8:37 PM GMT)

வாழப்பாடி அருகே கியாஸ் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மேம்பாலம் கட்ட கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாழப்பாடி,

விழுப்புரம் மாவட்டம் காவேரி நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவருடைய மகன் மணிகண்டன்(வயது 21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் மணிகண்டன் நேற்று விழுப்புரத்தில் இருந்து கோவைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டு இருந்தார்.

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பகுதியில் விபத்துகளை குறைக்க தேசிய நெடுஞ்சாலை குறுக்கே போலீசார் இரும்பு தடுப்பு அமைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மணிகண்டன் எதிர்பாராதவிதமாக இரும்பு தடுப்பில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த கியாஸ் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக மணிகண்டன் இறந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மேட்டுப்பட்டி பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. இங்கு மேம்பாலமோ அல்லது சர்வீஸ் சாலையோ அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதை அமைத்து தராத அரசை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை என்பதால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இது குறித்த தகவல் அறிந்ததும் வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சூர்யமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் செல்ல திருப்பி விடப்பட்டன. பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தகவல் அறிந்து அங்கு வந்த வாழப்பாடி தாசில்தார் வள்ளிதேவியும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது மேட்டுப்பட்டி பகுதியில் மேம்பாலம் அல்லது சர்வீஸ்ரோடு அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். மேலும் அங்கு வந்த கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் காமராஜ் பொதுமக்களிடம் மத்திய அரசிடம் மேம்பாலம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை சாலை மறியல் நடந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story