பேச்சுவார்த்தைக்கு செல்லாதது ஏன்? நாராயணசாமி விளக்கம்


பேச்சுவார்த்தைக்கு செல்லாதது ஏன்? நாராயணசாமி விளக்கம்
x
தினத்தந்தி 18 Feb 2019 5:00 AM IST (Updated: 18 Feb 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் மாளிகைக்கு பேச்சுவார்த்தைக்கு செல்லாதது ஏன்? என்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்தார்.

புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்றிரவு கவர்னர் மாளிகைக்கு பேச்சுவார்த்தைக்கு செல்லாதது ஏன்? என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

கவர்னர் கிரண்பெடி என்னையும், அமைச்சர்களையும் மாலை 6 மணிக்கு நடக்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். நாங்கள் பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க தயார் என்றோம். அந்த விவாதத்தின்போது துறைகளின் இயக்குனர்கள் இருந்தால் தலைமை செயலாளர், செயலாளர்கள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எளிதாக இருக்கும். அரசால் ஏற்கப்படாத சிறப்பு பணி அதிகாரியான தேவநீதிதாஸ் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்றேன். அதற்கும் ஒரு காரணம் உண்டு.

கவர்னரின் செயலாளராக இருந்த தேவநீதிதாஸ் பணிஓய்வு பெற்றவுடன் அவரை தனது அட்வைசராக நியமிக்க கவர்னர் உள்துறைக்கு கடிதம் எழுதினார். ஆனால் அதை உள்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. வேண்டுமானால் அவரை கன்சல்டன்ட் ஆக நியமித்துக்கொள்ளுமாறு கூறியது. ஆனால் கவர்னர் அவரை சிறப்பு பணி அதிகாரி என்று நியமித்துக்கொண்டார். இதுதொடர்பாக நான் உள்துறை அமைச்சகத்துக்கு புகார் கூறி கடிதம் எழுதினேன். அந்த பிரச்சினை நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் மாலை 7-10 மணிக்கு ஒரு கடிதத்தை கவர்னர் எனக்கு அனுப்பினார். அதை படித்து பார்த்தபோது அவரது ஆணவம் தெரிந்தது. எந்த இடத்தில் பேசுவது? யாரை அழைப்பது? என்பதை முடிவு செய்வது எல்லாம் நான்தான் என்று கூறியுள்ளார். அது உண்மைதான். இதை சொல்ல அவருக்கு உரிமை உண்டு. அதேபோல் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி பதவியேற்ற எங்களுக்கும், யாரை அழைப்பது? எங்கு கூட்டத்தை நடத்துவது? என்று சொல்ல உரிமை உண்டு.

கவர்னர் மாளிகையும் முற்றுகையிடப்பட்டுள்ளது என்ற பொய்யான தகவலை அவர் கூறியுள்ளார். அவர் கவர்னர் மாளிகைக்கு வரும்போது எந்தவித இடைஞ்சலும் ஏற்படுத்தப்படவில்லை. அதேபோல் தலைமை செயலாளர் மற்றும் அரசு செயலாளர்களும் எந்தவித தொந்தரவும் இன்றி சென்றனர். நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம்.

கவர்னர் அழைத்த துணை ராணுவம்தான் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு உள்ளது. புதுவை மக்கள் யாரும் கவர்னர் மாளிகையை முற்றுகையிடவில்லை. நாங்கள் இங்கு போராடும்போது அவர் கவர்னர் மாளிகைக்குள் சுதந்திரமாக சைக்கிளில் சுற்றி வருகிறார். ஆனால் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்ப ஆதாரங்களை திரட்டுகிறார்.

ஆனால் அவர் எழுதிய கடிதத்தை பார்க்கும்போது, பிரச்சினைக்கு தீர்வு காணும் எண்ணம் அவரிடம் இல்லை என்று தெரிகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story