வறுமை கோட்டிற்கு கீழுள்ள பயனாளிகள் கணக்கெடுப்பு பணி
தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதிஉதவி வழங்குவதற்காக வறுமை கோட்டிற்கு கீழுள்ள பயனாளிகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
பேரையூர்,
வறுமை கோட்டிற்கு கீழுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவி ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்காக வறுமைகோட்டிற்கு கீழுள்ள பயனாளிகளின் விவரங்களை பேரூராட்சி ஊழியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, கணக்கெடுத்து வருகின்றனர். மேலும் வறுமைகோட்டிற்கு கீழுள்ள பயனாளிகளிடம் தகுந்த ஆவணங்களை வாங்கி வருகின்றனர். இந்த பணியை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலையமான் திருமுடிகாரி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பேரையூர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சி அலுவலகங்களில் இதுகுறித்த ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும் ஒவ்வொரு வார்டிற்கு சென்று வறுமைகோட்டிற்கு கீழுள்ள பயனாளிகள் கொடுத்த ஆவணங்களை நேரில் சென்று தேர்வு செய்யப்படும் பயனாளிகள் அவர்கள்தானா என்றும், ஆவணங்கள் சரியானவையா என்றும் சரிபார்த்தார். இந்த பணிகளை விரைவில் முடிக்குமாறு பேரூராட்சி பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து மகளிர் சுயஉதவிக்குழுவினரால் நடத்தப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருள் விற்பனை செய்யும் ஸ்டாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவிசெயற்பொறியாளர் சுரேஷ்குமார், பேரூராட்சிகளின் கண்காணிப்பாளர் இப்ராகிம்ஷா, செயல் அலுவலர்கள் முருகேசன், சின்னச்சாமி பாண்டியன், இளநிலை பொறியாளர் மீனாகுமாரி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இருந்தனர்.
இதேபோல் மத்திய அரசின் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கும் ரூ.6 ஆயிரம் பெறக்கூடிய விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பை மாவட்ட கலால் உதவி ஆணையாளர் குருசங்கர் தலைமையில் அதிகாரி குழுவினர் டி.கல்லுப்பட்டி, பேரையூர் மற்றும் ஊராட்சி பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகள் அளித்த மனுக்களையும் பெற்றனர். இதுதவிர கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் ஆகியோர் தற்போது பெற்று வரும் விவசாயிகளின் மனுக்களை கணினியில் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுரை கூறினர். உடன் பேரையூர் தாசில்தார் இளமுருகன் மற்றும் வருவாய் துறையினர் இருந்தனர்.