புலவாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்’ பதிவு; தனியார் பள்ளி ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது
பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்’ பதிவு செய்த தனியார் பள்ளி ஆசிரியை தேசத்துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவருடைய வீட்டை தீவைத்து எரித்த 6 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
பெங்களூரு,
புலவாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணம் அடைந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்’ பதிவு செய்த தனியார் பள்ளி ஆசிரியை தேசத்துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவருடைய வீட்டை தீவைத்து எரித்த 6 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
40 பேர் மரணம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புலவாமா மாவட்டம் அவந்திபோரா என்ற இடத்தில் கடந்த 14-ந் தேதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இந்திய துணை ராணுவவீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். நாட்டையை உலுக்கிய இந்த சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஆனால், சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
தேசத்துரோக வழக்குகள்
பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததாக பெங்களூருவில் தனியார் கல்லூரியில் படித்து வரும் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் தாகீர் லத்தீப் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதுபோன்று ஹாவேரி மாவட்டத்தில் ஒருவரும் சிக்கியுள்ளார். மேலும் பெங்களூருவில் வசித்த ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஆபித் மாலிக், ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கியில் வசித்து வரும் 6 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டு உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
தனியார் பள்ளி ஆசிரியை
பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா கடபி சிவாபுரா கிராமத்தில் வசித்து வருபவர் ஜீலிகாபீ மமதாபூர்(வயது 25) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் புலவாமா தாக்குதலை தொடர்ந்து அவர் தனது ‘வாட்ஸ்-அப்பில்’ ‘பாகிஸ்தான் கி ஜெய்ஹோ’ என்று பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த அந்த கிராம மக்கள் அவருடைய வீட்டு முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் ஆசிரியை ஜீலிகாபீ மமதாபூருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
கைது
மேலும், அவருடைய வீட்டு மீது கல்வீசிய அவர்கள் வீட்டு வாசலில் தீவைத்தனர். இதனால் வாசலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. இதற்கிடையே, சம்பவம் குறித்து அறிந்த முருகோடு போலீசார் தீயை அணைத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தனர்.
அப்போது, அவர்கள் ஆசிரியை ஜீலிகாபீ மமதாபூரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவர் தனது ‘வாட்ஸ்-அப்பில்’ பதிவு செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் முருகோடு போலீசார் ஆசிரியை ஜீலிகாபீ மமதாபூரை கைது செய்தனர். அவர் மீது தேசத்துரோகம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
கைதான ஜீலிகாபீ மமதாபூரை நேற்று கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்திய போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
அத்துடன், ஜீலிகாபீ மமதாபூர் வீட்டுக்கு தீவைத்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுபற்றியும் முருகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story