சுகாதார திட்டத்தில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து கருத்து கேட்க வேண்டும் பிரதமர் மோடிக்கு, முதல்-மந்திரி குமாரசாமி கடிதம்
சுகாதார திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் விளம்பரங்கள் தொடர்பாக கர்நாடக அரசிடம் கருத்து கேட்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு, முதல்-மந்திரி குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு,
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் சுகாதார திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் விளம்பரங்கள் தொடர்பாக கர்நாடக அரசிடம் கருத்து கேட்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு, முதல்-மந்திரி குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.
முதல்-மந்திரி குமாரசாமி, பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்தம்
கர்நாடக அரசு கடந்த ஆண்டு(2018) மார்ச் மாதம் 2-ந் தேதி ‘ஆரோக்கிய கர்நாடகா’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சை பெற்று கொள்ள முடியும். இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு கடந்த ஆண்டு(2018) மார்ச் 21-ந் தேதி ‘ஆயுஸ்மான் பாரத்’ என்ற சுகாதார திட்டத்தை கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 10 கோடி ஏழை மக்கள் பயன் அடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு ஒப்பந்தம் செய்து இந்த திட்டங்களை இணைத்து கர்நாடகத்தில் செயல்படுத்தி வருகிறது.
கர்நாடக அரசு புறக்கணிப்பு
அதன்படி, கர்நாடகத்தில் 62.2 லட்சம் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன. இதற்காக மத்திய அரசு ரூ.22 கோடியும், மாநில அரசு ரூ.161 கோடியையும் செலவழித்துள்ளது., மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தில் கர்நாடக அரசு அதிக நிதி செலவழித்தபோதிலும், இந்த திட்டம் தொடர்பாக வெளியாகும் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் மட்டுமே இடம் பெறுகிறது. இதில் கர்நாடக அரசு புறக்கணிக்கப்படுகிறது.
இனிவரும் நாட்களில் இந்த திட்டம் தொடர்பாக வெளியாகும் விளம்பரங்களில் புகைப்படம் வெளியிட்டால், அதுகுறித்து கர்நாடக அரசிடமும் கருத்து கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story