இந்த மாத இறுதிக்குள் 20 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா - அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்


இந்த மாத இறுதிக்குள் 20 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா - அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
x
தினத்தந்தி 17 Feb 2019 11:00 PM GMT (Updated: 17 Feb 2019 9:37 PM GMT)

இந்த மாத இறுதிக்குள் 20 தொழிற்சாலைகளுக்கு அடிக்கால் நாட்டு விழா நடைபெற இருப்பதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர்,

தமிழக அரசின் சார்பில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் தொழில் அதிபர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இந்த மாத இறுதிக்குள் 20 தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை விட 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிறுவனங்களில் 20 நிறுவனங்களுக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து அந்த நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தொழில்தொடங்குவதற்கான நிலையை உருவாக்கி வருகிறோம். அதன்படி இந்த மாத இறுதிக்குள் 20 புதிய தொழிற்சாலைகளுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தை என்.ஓ.சி.எல். நிறுவனமும், ரூ.1,000 கோடியில் சன்மார் நிறுவனமும் தொழில் தொடங்க இருக்கின்றன. தொழில் தொடங்குவதற்கு தேவையான நிலங்கள் தயார் நிலையில் உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தனியார் காலணி தயாரிப்பு தொழிற்சாலை தொடங்கி பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறைந்துள்ளது. அதேபோல் கடலூர் மாவட்டத்திலும் தொழில் நிறுவனங்களை தொடங்கி பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story