குதிரைபேர ஆடியோ வெளியான விவகாரம் எடியூரப்பா உள்பட 4 பேருக்கு முன்ஜாமீன் பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவு
குதிரைபேர ஆடியோ வெளியான விவகாரத்தில் எடியூரப்பா உள்பட 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
பெங்களூரு,
குதிரைபேர ஆடியோ வெளியான விவகாரத்தில் எடியூரப்பா உள்பட 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
குதிரைபேரம்
யாதகிரி மாவட்டம் குருமித்கல் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நாகனகவுடா. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர். இவருடைய மகன் ஷரண்கவுடா.
இந்த நிலையில் நாகனகவுடாவை பா.ஜனதாவுக்கு இழுக்க அவருடைய மகன் ஷரண் கவுடாவிடம் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, பா.ஜனதா கட்சியை சேர்ந்த தேவதுர்கா தொகுதி எம்.எல்.ஏ. சிவனகவுடா நாயக், ஹாசன் எம்.எல்.ஏ. பிரீத்தம் கவுடா, எடியூரப்பாவின் ஊடக ஆலோசகர் மாரம்கால் ஆகியோர் குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இதுதொடர்பான ஆடியோ வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் கர்நாடக சட்டசபையில் எதிரொலித்தது. இதையடுத்து சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தன்னிடம் குதிரைபேரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி ராய்ச்சூர் மாவட்ட சூப்பிரண்டு கிஷோர் பாபுவிடம், ஷரண் கவுடா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தேவதுர்கா போலீசார் எடியூரப்பா, சிவனகவுடா நாயக், பிரீத்தம் கவுடா, மாரம்கால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.
முன்ஜாமீன்
இந்த நிலையில் ஆடியோ வெளியான வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி எடியூரப்பா உள்ளிட்டவர்கள் பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு கோர்ட்டில் மனு செய்தனர்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய கோர்ட்டு அவர்கள் 4 பேருக்கும் சில நிபந்தனைகள் விதித்து இடைக்கால முன்ஜாமீன் வழங்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதாவது சாட்சிகளை அளிக்க கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் இதில் அடங்கும்.
Related Tags :
Next Story