பா.ஜனதா தலைவர்களிடம் இருந்து ரூ.50 கோடி வாங்கியதை நிரூபித்தால் தற்கொலை செய்வேன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமேஷ் ஜாதவ் பரபரப்பு பேட்டி
பா.ஜனதா தலைவர்களிடம் இருந்து ரூ.50 கோடி வாங்கியதை நிரூபித்தால் தற்கொலை செய்வேன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான உமேஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பா.ஜனதா தலைவர்களிடம் இருந்து ரூ.50 கோடி வாங்கியதை நிரூபித்தால் தற்கொலை செய்வேன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான உமேஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
ரூ.50 கோடி வாங்கியதாக...
கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உமேஷ் ஜாதவ் இருந்து வருகிறார். மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் தலைவர்கள் மீது அவர் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதனால் அவர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் சேரப்போவதாகவும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக பா.ஜனதா சார்பில் உமேஷ் ஜாதவ் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தையும், பட்ஜெட் கூட்டத் தொடரிலும் கலந்து கொள்ளாமல் உமேஷ் ஜாதவ் புறக்கணித்தார்.
இந்த நிலையில், ஆபரேஷன் தாமரை மூலம் பா.ஜனதா கட்சியில் சேருவதற்காக உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏ. ரூ.50 கோடியை பா.ஜனதா தலைவர்களிடம் இருந்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து நேற்று கலபுரகி மாவட்டம் வாடியில் உமேஷ் ஜாதவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
தற்கொலை செய்வேன்
காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்த முறை மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் கட்சி தலைவர்கள் மீது அதிருப்தியில் இருப்பது உண்மை தான். நான் காங்கிரஸ் கட்சியில் தான் தற்போதும் இருக்கிறேன். பா.ஜனதாவில் சேரவில்லை. பா.ஜனதா கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை. பா.ஜனதா தலைவர்களிடம் இருந்து நான் ரூ.50 கோடி வாங்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல. நான் ரூ.50 கோடி வாங்கியது நிரூபிக்கப்பட்டால், உடனடியாக தற்கொலை செய்வேன்.
2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு, காங்கிரஸ் கட்சி மதிப்பளிக்கவில்லை. கட்சியில் எனக்கு எதிராக சதி நடக்கிறது. எனது தொகுதியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதற்கு சிலரின் சதி வேலையே காரணம்.
இவ்வாறு உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏ. கூறினார்.
Related Tags :
Next Story