பள்ளி பாடத்தில் தற்காப்பு கலையை சேர்க்க திட்டம் மந்திரி வினோத் தாவ்டே தகவல்
பள்ளி பாடத்திட்டத்தில் தற்காப்பு கலையை சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளதாக மந்திரி வினோத் தாவ்டே தகவல் தெரிவித்தார்.
மும்பை,
பள்ளி பாடத்திட்டத்தில் தற்காப்பு கலையை சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளதாக மந்திரி வினோத் தாவ்டே தகவல் தெரிவித்தார்.
விண்ணப்பம்
புனேயை சேர்ந்த பெண் தற்காப்பு கலை பயிற்சியாளரும், 7 வயது பெண் குழந்தையின் தாயுமான நேகா சரிமால் என்பவர், கடந்த ஆண்டு அரசு இணையதளத்தில் விண்ணப்பம் ஒன்றை பதிவிட்டார்.
இதில் அவர் கூறியிருந்ததாவது:-
இந்தியாவில் சுமார் 53 சதவீதம் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை சந்தித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சம்பவம் எங்கு நேர்ந்தாலும் போலீசார் மற்றும் நீதி துறை அவர்களின் உதவிக்கு வருகிறது.
ஆனால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் இதை எதிர்கொள்ளும் சக்தி இருக்கிறது என்பதை நாம் நினைத்து பார்ப்பதில்லை. குழந்தைகள் அனைவரும் சிறு வயது முதலே தங்களை தற்காத்துக்கொள்ள பயிற்றுவிக்கப்படவேண்டும்.
எனவே மராட்டிய அரசு 5-ம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் தற்காப்பு கலையை கட்டாயமாக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
அரசு நடவடிக்கை
மேலும் அவரின் மனுவுக்கு ஆதரவு தெரிவித்து 1 லட்சத்து 38 பேர் கையெழுத்து இட்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்த மனுவுக்கு மாநில கல்வி மந்திரி வினோத் தாவ்டே பதிலளித்து கூறியதாவது:-
நாங்கள் சமீபத்தில் தான் மராட்டியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஒரு மணி நேர விளையாட்டு நடவடிக்கைகளை ஒதுக்க திட்டமிட்டோம். மனுதாரரின் கோரிக்கையை ஏற்று தற்காப்பு கலையையும் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக சேர்க்க திட்டமிட்டு உள்ளோம்.
பள்ளி கல்வி துறை மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story