தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரகத்தை சேர்ந்த நெய்யப்படாத கைப்பைகளை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரகத்தை சேர்ந்த நெய்யப்படாத கைப்பைகளை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தி உள்ளார்.
தர்மபுரி,
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழக அரசு உத்தரவின்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை கடந்த ஜனவரி மாதம் 1–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இதன்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் கைப்பைகளை மக்கள் பரவலாக பயன்படுத்தி வந்ததால் அதன் இயல்புகளை நன்கு அறிந்திருந்தனர்.
அதே நேரத்தில் நெய்யப்படாத கைப்பைகள் அமைப்பு, நிறம் மற்றும் இயல்பாக துணிப்பைகளை போலவே இருப்பதால் மக்கள் துணிப்பை என தவறாக புரிந்து கொண்டு உள்ளனர். இந்த வகையான நெய்யப்படாத பைகளின் மூலக்கூறு சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று பிளாஸ்டிக் தொழில்நுட்பம் குறித்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெய்யப்படாத கைப்பைகளும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரகத்தை சேர்ந்தது ஆகும். கடந்த ஜனவரி மாதம் 1–ந்தேதி முதல் தமிழகம் பிளாஸ்டிக் மாசு இல்லாத மாநிலமாக செயல்பட தொடங்கி உள்ள நிலையில் பிளாஸ்டிக் பைகள் வகையை சேர்ந்த நெய்யப்படாத கைப்பைகள் இனிப்பு கடைகள், மருந்தகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துணிப்பைகள் என கருதி பயன்படுத்தப்படுகிறது.
எனவே தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரகத்தை சேர்ந்த நெய்யப்படாத கைப்பைகளை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது. பாரம்பரிய சணல் மற்றும் துணியால் ஆன பைகள், காகித பைகளை மட்டுமே பொருட்கள் வாங்கி செல்ல பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.