உலக தாய் மொழி தினமான 21–ந் தேதி அனைத்து பள்ளிகளிலும் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை


உலக தாய் மொழி தினமான 21–ந் தேதி அனைத்து பள்ளிகளிலும் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை
x
தினத்தந்தி 19 Feb 2019 4:30 AM IST (Updated: 18 Feb 2019 8:01 PM IST)
t-max-icont-min-icon

உலக தாய்மொழி தினமான வருகிற 21–ந் தேதி அனைத்து பள்ளிகளிலும் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் கூறி உள்ளார்.

திருவண்ணாமலை, 

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித் துறை நவம்பர் 2016–ம் ஆண்டு முதல் 100 சதவீதம் தமிழ் கற்றல் என்ற இலக்கை நடைமுறைப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது 85 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் 100 சதவீதம் தமிழ் கற்றல் இலக்கை அடிப்படையாகக் கொண்டு உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட உள்ளது.

தமிழ் கற்றல் கற்பித்தலில் தனி கவனம் செலுத்தி சிறப்பு பயிற்சி அளிக்கவும், 2018–19–ம் கல்வியாண்டு வருகிற மார்ச் மாதம் 31–ந் தேதிக்குள் 100 சதவீதம் தமிழ் வாசித்தலை உறுதி செய்து உலக தாய்மொழி தினத்தை கொண்டாடுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

உலக தாய்மொழி தினம் வருகிற 21–ந் தேதி (வியாழக்கிழமை) அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி தாய்மொழியின் பெருமைகளை மாணவர்கள் உணர்த்தி தாய்மொழி பற்று மிக்க மாணவர்களாக வளர அவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்.

மேலும் அனைத்து பள்ளிகளிலும் ‘தமிழ் வாழ்க‘ என்ற பெயர் பலகையை வைக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story