ஆரணியில் ஜெயலலிதா பேரவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 2 அமைச்சர்கள் பங்கேற்பு
ஆரணியில் நடந்த ஜெயலலிதா பேரவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரணி,
ஆரணி– சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள எஸ்.கே.வி.பாக்யலட்சுமி திருமண மகாலில் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை அமைப்பின் சார்பில் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனைகூட்டமும், வருகிற 24–ந் தேதி மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி பொறுப்பேற்று இரண்டாண்டுகள் சாதனைகளை விளக்குவது சம்பந்தமாகவும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. மக்களிடையே சந்தித்து வாக்கு பெறுவது சம்மந்தமாக கூட்டம் நடந்தது.
ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளரும், தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில நிர்வாகிகள் என்.சதன்பிரபாகரன், கே.ஏ.கே.முகில், கே.எஸ்.சீனிவாசன், சி.பி.முவேந்தன், பாலகுமார், ராஜசேகர், அருள்பழனி, முரளி, ரமேஷ், ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணிநகர ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரி பி.பாபு வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:–
ஒரு சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் யாராவது சைக்கிளில் சென்று பிரசாரம் செய்ததை பார்த்திருக்கிறீர்களா? அது நமது அ.தி.மு.க.வுக்கு மட்டுமே சாத்தியமாகும்.
ஏன், இன்றுகூட (நேற்று) தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு மூலம் தமிழக அரசு போராடி தடை உத்தரவு பெற்றுள்ளது.எதிர்கட்சியினர் 2 நாட்களாக ஆலையை திறக்க உத்தரவு வரும் என எதிர்பார்த்தார்கள். அதை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்தார்கள். அதுவும் நடக்கவில்லை.
நமது பொது செயலாளர் இறந்தவுடன் எதிர்கட்சியினர் இரண்டே நாட்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கூறி பிரசாரம் செய்தனர். ஆனால் 2 ஆண்டுகளாக முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறந்த ஆட்சி வழங்கி வருகிறார்.
கடந்த தை திருநாளில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்புடன் கூடிய ரூ.1,000 வழங்கப்பட்டது அதனையும் தடை செய்யவேண்டும் என தி.மு.க.வினர் திட்டம் தீட்டினர், எடுபடவில்லை.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டங்கள் நடத்தினார்கள். அதற்கு தற்காலிக பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிப்பு செய்தவுடன் ஆயிரக்கணக்கான படித்து வேலையற்றவர்கள், எங்களுக்கு சம்பளம் வேண்டாம் எனக் கூறி விண்ணப்பித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களே வாபஸ் பெற்று வேலைக்கு திரும்பினார்கள்.
தி.மு.க. தலைமையில் அமைத்து வருகிற கூட்டணி ஜீரோ கூட்டணி. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிராமசபை கூட்டங்கள் நடத்தி மாதிரி சட்டசபைகூட்டம் என்று கூறுகிறார். நாங்கள் சட்டசபைக்கு வாருங்கள் என்று கூறுகிறோம், வர மறுக்கிறார். அவரே ஜீரோ தான். அவரை நம்பி செல்கிறவர்களும் ஜீரோதான். அ.தி.மு.க. அமைக்கும் கூட்டணி ராஜ்ஜியகூட்டணி. இந்த கூட்டணி தான் வெல்ல போகிறது. அதற்கு தொண்டர்களாகிய நீங்கள் ஆணிவேராக இருந்து வெற்றிக்கு வித்திட வேண்டும். அதிக தொண்டர்கள் உள்ள கட்சி அ.தி.மு.க.தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., முன்னாள்அமைச்சர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.ராமச்சந்திரன், எம்.பி.க்கள் செஞ்சி வி.ஏழுமலை, ஆர்.வனரோஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெமினி கே.ராமச்சந்திரன், நளினிமனோகரன், ஏ.கே.எஸ்.அன்பழகன், அரங்கநாதன், வே.குணசீலன், முன்னாள் மாவட்ட செயலாளர் தெள்ளார் வி.சீனிவாசன், அண்ணா தொழிற்சங்க மாவட்டத் தலைவர் சேவூர் ஜெ.சம்பத், மாவட்ட செயலாளர் அருணகிரி, சேவூர் ஊராட்சிமன்ற முன்னாள்தலைவர் கே.பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, எம்.பாண்டியன், நகர செயலாளர் அசோக்குமார் உள்பட 3 மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள், பல்வேறு பிரிவு நிர்வாகிகள், கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயலலிதா பேரவையின் மாவட்ட துணை செயலாளர் ஜி.வெங்கடேசன் நன்றிகூறினார்.