வீடு, நிலத்தை மீட்டு தரக்கோரி சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
வீடு, நிலத்தை மீட்டு தரக்கோரி சகோதரிகள் தீக்குளிக்க முயன்றதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர்.
தண்டராம்பட்டு தாலுகா மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சகோதரிகள் ராஜாத்தி, காசியம்மாள் ஆகியோர் சுமார் 95 வயதுடைய அவர்களது தாய் கூத்தம்மாளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் ராஜாத்தியும், காசியம்மாளும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதில் காசியம்மாள் மீது அதிகளவில் மண்எண்ணெய் பட்டு இருந்தது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கூறியதாவது:–
எங்களது தந்தை பெரியபையன் இறந்து விட்டார். எங்களுக்கு வீடு மற்றும் நிலம் தண்டராம்பட்டில் உள்ளது. அந்த இடத்தை எங்களது உறவினர் ஒருவர் சட்ட விரோதமாக போலி ஆவணங்கள் தயாரித்து அவர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொண்டார்.
இதற்கு தண்டராம்பட்டு கிராம நிர்வாக அலுவலரும், சிப்பந்தியும் உடந்தையாக உள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எங்கள் தந்தை பெயரில் இருந்த வீடு மற்றும் நிலத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.