இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் திருநங்கைகள் மனு
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், என்று சேலத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் திருநங்கைகள் மனு கொடுத்தனர்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டர் ரோகிணியிடம் வழங்கினர்.
இதையடுத்து அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வுகாணுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அப்போது, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் உதவித்தொகை வழங்கக்கோரி திருநங்கைகள் சிலர் மாவட்ட கலெக்டர் ரோகிணியை சந்தித்து மனுக்களை வழங்கினர். ஏற்கனவே கே.ஆர்.தோப்பூர் பகுதியில் சில திருநங்கைகளுக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது ஏராளமான திருநங்கைகள் குடியிருக்க வீடுகள் இல்லாமல் தவித்து வருவதால் அவர்களுக்கு அரசின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருநங்கைகள் சார்பில் கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருநங்கைகளின் மனுக்கள் மீது விசாரணை நடத்தி தகுதியுள்ள நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி உறுதியளித்தார்.
மேச்சேரி அருகே அழகா கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் அன்னபூரணி (வயது 60). இவர், நேற்று கலெக்டர் ரோகிணியை சந்தித்து கண்ணீர்மல்க ஒரு மனுவை அளித்தார். அதில், என்னுடைய 2 மகன்களும் சொத்தை வாங்கிக் கொண்டு என்னை துரத்திவிட்டனர். இதனால் சாப்பாட்டிற்குகூட வழியில்லாமல் தவித்து வருகிறேன். எனவே, என்னுடைய சொத்தை மீட்டுத்தர வேண்டும், என்று கூறியிருந்தார்.
Related Tags :
Next Story