முறையற்ற உறவு விபரீதத்தில் முடிந்தது, கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
விழுப்புரம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த அனந்தபுரம் அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மலர் (வயது 40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இவருடைய கணவர் கண் பார்வையற்றவர் ஆவார்.
இந்நிலையில் மலர், சென்னையில் தங்கியிருந்து கூலி வேலை செய்தார். அப்போது, அவருக்கும் அதே பகுதியில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்த வளவனூரை சேர்ந்த ஆனந்தன் (26) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து இருவரும் அவ்வப்போது தனியாக சந்தித்து பழகி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மலர், தனது கண்பார்வையற்ற கணவரை விட்டு பிரிந்து வந்து, கள்ளக்காதலன் ஆனந்தனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சென்னையில் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து, ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் ஆனந்தனின் சொந்த ஊரான வளவனூருக்கு வந்து, அங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
இதற்கிடையே மலருக்கு தூரத்து உறவுமுறையில் ஆனந்தன் தம்பி ஆவார். இவ்வாறு முறைதவறி வந்த கள்ளக்காதல் விவகாரம் பற்றி அறிந்த இருவீட்டாரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் தன்னிடம் இருந்து, ஆனந்தனை அவரது பெற்றோர் பிரித்து சென்றுவிடுவார்கள் என்று மலர் எண்ணினார். இதனால் மனமுடைந்த மலர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.
சிறிது நேரத்தில் ஆனந்தன் வீட்டிற்கு வந்தார். அவரிடம் தான் விஷம் குடித்து விட்டதாக மலர் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தன், அவரது மனைவி குடித்துவிட்டு வைத்திருந்த மீதி விஷத்தை எடுத்து தானும் குடித்தார். தொடர்ந்து இருவரும் வாயில் நுரைதள்ளியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தனர்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மலர் இறந்தார். ஆனந்தனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவரை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆனந்தனும் இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story