குடியாத்தம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்


குடியாத்தம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 19 Feb 2019 3:45 AM IST (Updated: 18 Feb 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியாத்தம், 

குடியாத்தம் ஒன்றியம் போஜனாபுரம் ஊராட்சி மேல்சுந்தரகுட்டை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சரிவர வினியோகிக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது,

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை சுமார் 7 மணி அளவில் காலிகுடங்களுடன் குடியாத்தம் - மேல்பட்டி சாலையில் உள்ளி கூட்ரோடு பகுதியில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள், தேவையான அளவு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story