கடலூர் அரசு பெரியார் கல்லூரியில், மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்


கடலூர் அரசு பெரியார் கல்லூரியில், மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 2019-02-18T23:02:20+05:30)

கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க கோரி கடலூர் அரசு பெரியார் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

கடலூர்,

கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசு பெரியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.எஸ்சி. நுண்ணுயிரியல் பிரிவில் முதலாம் ஆண்டு முதல் 3-ம் ஆண்டு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இங்கு துறை தலைவர் உள்பட 4 பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அவர்களால் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பாடம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆய்வக வசதியும் போதுமானதாக இல்லை. இது பற்றி அந்த துறை மாணவ-மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் பல முறை வலியுறுத்தியும் கூடுதல் பேராசிரியர்கள் நியமிக்க ஏற்பாடு செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நுண்ணுயிரியல் துறை மாணவ- மாணவிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்லவில்லை. பின்னர் கல்லூரி முதல்வர் ராஜகுமார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

ஆனால் மாணவர்கள் எழுத்து பூர்வமாக எழுதி தருமாறு கேட்டனர். இதை கல்லூரி முதல்வர் ஏற்கவில்லை. ஒரு வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாய்மொழியாக கூறினார். இதை கேட்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, வகுப்பறைக்கு சென்றனர்.

Next Story