பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் ரூ.6 ஆயிரம் நிதி உதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் ரூ. 6 ஆயிரம் நிதிஉதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி என்னும் திட்டத்தின்கீழ் 2 ஹெக்டேருக்கு குறைவாக சாகுபடி நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாய குடும்பங்களுக்கு எதிர்பார்த்த மகசூல் பெறும் நோக்கத்திற்காக, வேளாண் இடுபொருள், முறையான பயிர் வளர்ச்சி ஆகியவற்றிற்காக ஒரு விவசாய குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வீதம் 3 தவணையாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதன் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரத்தை வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவியை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி நிதி மாற்றம் செய்யும் நோக்கத்துடன் விரைந்துசெயல்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்த ஏதுவாக, வட்டம், வட்டாரம் மற்றும் கிராம வாரியாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, இத்திட்டத்தின்கீழ் தகுதியான சிறு, குறு விவசாயிகள் விவரம் கணக்கிடப்பட்டு பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
எனவே, இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியான விவசாயிகள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தினை அணுகி, உரிய விண்ணப்பத்தினை பெற்று, அதனுடன் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், நில ஆவணங்கள் போன்ற தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ள விவசாயிகளிடமிருந்து கடந்த 8-ந் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது.
பயனாளிகளுக்கு நிதியுதவி விரைவில் வழங்க ஏதுவாக, விண்ணப்பங்களை உடனடியாக அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொண்டு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Related Tags :
Next Story