நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து ஸ்ரீமுஷ்ணத்தில் கடைகளை அடைத்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்


நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து ஸ்ரீமுஷ்ணத்தில் கடைகளை அடைத்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 6:12 PM GMT)

நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து ஸ்ரீமுஷ்ணத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கடந்த ஆண்டு இறுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் வணிகர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் அதன்பின்னர் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக்கொள்வதாக வர்த்தகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகும் வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை என தெரிகிறது.

இதையடுத்து கடந்த 14-ந்தேதி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பரமேஸ்வரி, உதவி பொறியாளர் கார்த்தி தலைமையிலான அதிகாரிகள் 2 பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டு இருந்த வியாபாரிகளுக்கு சிறிது நேர அவகாசம் கூட தராமல் அவர்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றியதாக தெரிகிறது.

இதனால் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அத்துமீறி நடந்து கொண்ட நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து நேற்று ஸ்ரீமுஷ்ணத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டல்கள், மருந்து உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து கடைவீதி காமராஜர் சிலை அருகில் ஸ்ரீமுஷ்ணம் வர்த்தகர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு வர்த்தகர்கள் நலசங்க மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் வீரப்பன் முன்னிலை வகித்தார். நகர வர்த்தகர்கள் நலச்சங்க தலைவர் சோக்கு.சிவானந்தம், செயலாளர் தங்க.பன்னீர்செல்வம், பொருளாளர் தங்கராசு, மாவட்ட துணை தலைவர் ரவி, பூவராகமூர்த்தி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் குணசேகரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்க.ஆனந்தன், ம.தி.மு.க., நகர செயலாளர் சொ.அருள்மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் அனைத்து வர்த்தகர்களும் கலந்து கொண்டனர். முடிவில் வர்த்தக சங்க பிரமுகர் மகேஷ் நன்றி கூறினார். 

Next Story