மாணவியை பலாத்காரம் செய்தவரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் மறியல்
மாணவியை பலாத்காரம் செய்தவரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று இவளை அதே பகுதியை சேர்ந்த பாலகுரு மகன் திலகர்(வயது 32), துரைக்கண்ணு மகன் ஜெய்சங்கர் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த மாணவி கடந்த 14-ந்தேதி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்சங்கர் உள்பட 2 பேர் மீது சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகரை கைது செய்தனர். ஜெய்சங்கரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, தலைமறைவாக உள்ளவரை கைது செய்யக்கோரியும், அந்த வழக்கை கொலை முயற்சி வழக்காக மாற்றக்கோரியும், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும், ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் நேற்று காலையில் சென்னை-கும்பகோணம் சாலையில் குமாரகோவிலில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்று அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story