திருமண மண்டபத்துக்கு சான்று வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுகாதாரத்துறை அதிகாரி கைது திருவண்ணாமலையில் பரபரப்பு
திருமண மண்டபத்துக்கு சான்று வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுகாதாரத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த திலோக் சந்துரு என்ற வக்கீல் அவரது திருமண மண்டபத்திற்கு சுகாதார தரச்சான்று வழங்கக்கோரி சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் (தொழில்நுட்ப பிரிவு) சுந்தர்ராஜ் ஆய்வு செய்துள்ளார். பின்னர் சான்று வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று திலோக்சந்துருவிடம் அவர் கேட்டுள்ளார்.
அதன்பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ரூ.6 ஆயிரமாக குறைக்கப்பட்டது. லஞ்சம் கொடுக்க மனமில்லாத அவர் இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், திலோக்சந்துருவிடம் ஆலோசனை வழங்கி ரசாயனம் தடவிய 6 ஆயிரத்திற்கான ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி உள்ளனர். அவர்களது அறிவுரையின் பேரில், திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியில் இருந்த நேர்முக உதவியாளர் சுந்தர்ராஜிடம் ரூ.6 ஆயிரத்தை திலோக் சந்துரு நேற்று கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக சுந்தர்ராஜை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story