நீலகிரி மாவட்டத்தில் தடையை மீறி நள்ளிரவில் கேரட் அறுவடை


நீலகிரி மாவட்டத்தில் தடையை மீறி நள்ளிரவில் கேரட் அறுவடை
x
தினத்தந்தி 19 Feb 2019 4:00 AM IST (Updated: 19 Feb 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் தடையை மீறி நள்ளிரவில் கேரட் அறுவடை நடைபெறுவதை தடுக்கக்கோரி கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

ஊட்டி,

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி ஊட்டி அருகே கேத்தி பாலாடாவில் கேரட் அறுவடை செய்யும் கூலி தொழிலாளர்கள் நீலகிரியில் நள்ளிரவில் கேரட் அறுவடைக்கு தொழிலாளர்கள் செல்வதை தடுக்கக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மலை மாவட்டமான நீலகிரியில் கேரட் சாகுபடி அதிகமாக செய்யப்படுகிறது. கூலி தொழிலாளர்கள் விவசாயத்தை நம்பி குடும்பம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொழிலாளர்களின் நலன் கருதி நள்ளிரவில் கேரட் அறுவடைக்கு செல்லக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவு சில வாரங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது தடையை மீறி நள்ளிரவு கேரட் அறுவடை செய்வதற்காக தொழிலாளர்கள் வாகனங்களில் ஏற்றி செல்லப்படுகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் நிலையம், வட்டார போக்குவரத்து அலுவலகம், விவசாய சங்கத்திற்கும் புகார் கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நள்ளிரவில் கேரட் அறுவடைக்கு செல்வதால், வனவிலங்குகளால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக நள்ளிரவில் அறுவடை செய்யும் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. தூக்கமின்மையால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

எனவே நள்ளிரவில் கேரட் அறுவடைக்கு செல்வதை தடுப்பதோடு, நீலகிரி மாவட்டம் முழுவதும் காலை 6 மணி முதல் கேரட் அறுவடை என்பதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்து முன்னணியின் ஊட்டி நகர தலைவர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், ஊட்டி நகரில் அப்பர் பஜார், புட்சர் தெரு, எல்க்ஹில் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே உள்ள பொது கழிப்பிடங்கள் சரிவர பராமரிக்காததால் சுகாதாரம் இன்றி உள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பிடங்களை சரிசெய்து தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேல்கோடப்பமந்து பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 9-வது மைல் பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்ட கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அப்பகுதியில் சாலை குறுகலாக உள்ளதால், அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. 

Next Story