பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம், ஊட்டியில் கோட்ட அலுவலகம், கூடலூர் மற்றும் கோத்தகிரியில் உதவி பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நீலகிரியில் ஊழியர்கள் 220 பேர், ஒப்பந்த பணியாளர்கள் 115 பேர் பணிபுரிந்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தின் முன்மொழிவின்படி பி.எஸ்.என்.எல்.-க்கு 4ஜி சேவையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும், 1.1.2017 முதலான ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நீலகிரி மாவட்டம் முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம் காரணமாக அலுவலகங்களுக்கு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. அதன் காரணமாக அலுவலக நுழைவுவாயில் அடைக்கப்பட்டு, பூட்டு போடப்பட்டு இருந்தது. ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். கோட்ட அலுவலகம் மூடப்பட்டு இருந்ததால் தொலைபேசி, டேட்டா மற்றும் செல்போன் கட்டணம் செலுத்த வந்தவர்கள் திரும்பி சென்றனர். சேவை ஏதேனும் பாதிக்கப்பட்டால், அதனை சரிசெய்ய முடியாத நிலை உள்ளது. நுழைவுவாயில் முன்பு வேலைநிறுத்தம் குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.
அதில் இந்தியா முழுவதும் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும் குறைந்த கட்டணத்தில் நல்ல சேவை வழங்கி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை ஒழிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். மக்களுக்கு பயன்படக்கூடிய சேவை திட்டங்களை முடக்கி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நஷ்டப்படுத்துவதை தடுக்க வேண்டும். விரிவாக்கத்திற்கு உயர் தொழில்நுட்ப உபகரணங்களை உடனடியாக பெற வேண்டும். ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிபவர்களை நிந்தரம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடக்கிறது.
Related Tags :
Next Story