தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்ய மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த தொழிலாளி


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்ய மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த தொழிலாளி
x
தினத்தந்தி 18 Feb 2019 11:00 PM GMT (Updated: 18 Feb 2019 7:50 PM GMT)

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்ய வந்த தொழிலாளியிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மனு கொடுக்க வரும் பொதுமக்களில் சிலர், மண்எண்ணெய், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களுடன் வந்து அதிகாரிகள் முன்னிலையில் தன் மீது ஊற்றி கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதனால் பலத்த சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் மனு கொடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக தண்ணீர் பாட்டில்களை கூட்ட அறைக்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது. தீயணைப்பு வீரர்களும் கூட்ட அறை முன்பு தயார் நிலையில் நிறுத்தப்படுவது வழக்கம். இப்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தாலும் ஒரு சிலர், மண்எண்ணெய், பெட்ரோல் பாட்டில்களுடன் வருகின்றனர்.

தஞ்சையை அடுத்த மேட்டுப்பட்டி வடக்குதெருவை சேர்ந்த சங்கிலிமுத்து மகன் பால்ராஜ் தனது பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். தொழிலாளியான அவர் கையில் துணி பை வைத்திருந்தார். அந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் மண்எண்ணெய் பாட்டில் இருந்தது. தற்கொலை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்ததால் அந்த பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்து அவரையும், அவரது பெற்றோரையும் ஜீப்பில் ஏற்றி தமிழ்ப்பல் கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு போலீசாரிடம் பால்ராஜ் கூறியதாவது:-

கடந்த 6-ந் தேதி எனது கிராமத்தை சேர்ந்த அண்ணன்-தம்பிகள் 4 பேர் முன்விரோதம் காரணமாக அரிவாள், கட்டையால் என்னை வீடு புகுந்து தாக்கினர். தடுக்க வந்த எனது சகோதரியின் தலைமுடியை பிடித்து கீழே தள்ளி மானபங்கப்படுத்தினர். இதனால் நாங்கள் அவமானம் அடைந்தோம். இதில் காயம் அடைந்த 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோம்.

வல்லம் போலீசார் வந்து எங்களிடம் புகார் பெற்று சென்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர் தரப்பினர் போலீசாரிடம் செல்வாக்கு பெற்று இருப்பதால் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனால் தற்கொலை செய்யக்கூடிய மனநிலையில் உள்ளோம். கடந்த வாரம் தற்கொலை செய்வதற்காக எனது சகோதரியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தேன். போலீசார் எங்களுக்கு அறிவுரை கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சலில் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story