திருச்சி மத்திய சிறையில் கைதிகளால் நடத்தப்படும் தையலகம் டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்


திருச்சி மத்திய சிறையில் கைதிகளால் நடத்தப்படும் தையலகம் டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 18 Feb 2019 11:00 PM GMT (Updated: 18 Feb 2019 7:53 PM GMT)

திருச்சி மத்திய சிறையில் கைதிகளால் நடத்தப்படும் தையலகத்தை சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

திருச்சி,

திருச்சி மத்திய சிறையில் கைதிகளின் மறுவாழ்வுக்காக அவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி சிறை வளாகத்தையொட்டி உள்ள சிறை அங்காடியில் ஏற்கனவே உணவகம், பேக்கரி ஆகியவை செயல்பட்டு வந்தன.

இந்தநிலையில் தற்போது புதிதாக தையலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தையலகத்தை திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறை சூப்பிரண்டு முருகேசன், சிறை அங்காடி சூப்பிரண்டு திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிறை தையலகம் குறித்து டி.ஐ.ஜி.சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மத்திய சிறையில் 1,400 கைதிகள் உள்ளனர். இவர்களில் 400 கைதிகள் ஆயுள்தண்டனை கைதிகள் ஆவர். இதில் நன்னடத்தை அடிப்படையில் உள்ள கைதிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் உணவகம், பேக்கரி, தையலகம் போன்றவற்றில் பணியாற்றி வருகிறார்கள். அந்தவகையில் 60 ஆயுள் தண்டனை கைதிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருச்சி சிறை அங்காடியில் திறக்கப்பட்டுள்ள தையலகத்தில் தற்போது 2 கைதிகள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு போலீசாருக்கான சீருடை மற்றும் பொதுமக்களுக்கான துணிகள் குறைந்த விலையில் தைத்து தரப்படும்.

இதுபோன்ற பணியில் கைதிகள் ஈடுபடுவதால் அவர்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டு தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும்போது, தன்னம்பிக்கையுடன் வாழ வழிபிறக்கும். தையலகத்தில் உள்ள கைதிகளுக்கு பிரத்யேக தையல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தையலகத்தில் முழுக்கை சட்டை தைக்க ரூ.175-ம், அரை கை சட்டை தைக்க ரூ.125-ம், பேண்ட் தைக்க ரூ.200-ம், மற்றும் சுடிதாருக்கு ரூ.150-ம், ஜாக்கெட்டுக்கு ரூ.80-ம், காவலர் சீருடை சட்டைக்கு ரூ.250-ம், காவலர் சீருடை பேண்ட்டுக்கு ரூ.250-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திருச்சி சிறையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 44 கைதிகளும், பிளஸ்-1 தேர்வை 6 கைதிகளும், பிளஸ்-2 தேர்வை 12 கைதிகளும் எழுதுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story