விமான நிலைய பயன்பாட்டுக்கு குத்தகைக்கு வழங்கிய நிலத்தை கையகப்படுத்தி பணம் தர வேண்டும்


விமான நிலைய பயன்பாட்டுக்கு குத்தகைக்கு வழங்கிய நிலத்தை கையகப்படுத்தி பணம் தர வேண்டும்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 8:39 PM GMT)

விமான நிலைய பயன்பாட்டுக்கு குத்தகைக்கு வழங்கிய நிலத்தை கையகப்படுத்தி பணம் தர வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் நில உரிமைதாரர்கள் மனு அளித்தனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் நடைபாதை, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

கூட்டத்தில் கோவை விமான நிலைய பயன்பாட்டிற்காக நிலத்தை குத்தகைக்கு வழங்கிய நில உரிமைதாரர்கள் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை சிங்காநல்லூர் மற்றும் காளப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விமான நிலைய பயன்பாட்டிற்காக 61 ஏக்கர் நிலத்தை குத்தகைஅடிப் படையில் வழங்கினோம். எங்களுக்கு கடந்த 31.12.2014 வரையிலான காலகட்டத்திற்கு மட்டும் குத்தகை பணம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது வரை குத்தகை பணம் வழங்கப்பட வில்லை. இதனால் 200 குடும்பங்கள் பாதிக் கப்பட்டு உள்ளோம். எனவே எங்களுக்கு நிலுவையில் உள்ள குத்தகைதொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எங்களின் நிலத்தை அரசு உடனடியாக கையகப்படுத்தி எங்களுக்கு உரியதொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் ஜீவாநகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஜீவாநகரில் வசித்து வருகிறோம். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துடன், நாங்கள் கடந்த 1989-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அப்போது மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை தவணையாக செலுத்த வேண்டும். 20 ஆண்டுகளுக்கு பின்னர் பட்டா தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் தற்போது எங்களை உடனடியாக வீடுகளை காலி செய்ய கூறுகின்றனர். பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் வீடுகளை காலி செய்தால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும். மேலும் எங்களுக்கு கீரணத்தம் பகுதியில் வீடுகள் ஒதுக்குவதாக கூறுகின்றனர். அந்த இடம் வெகு தொலைவில் உள்ளது. எங்களுக்கு ஜீவா நகர் அருகிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும். மேலும் வீடுகளை காலி செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சூலுர் அருகே பதுவம்பள்ளி ஊராட்சி அர்ஜூணா காலனி பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களது காலனியில் 80 வீடுகள் உள்ளன. நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களது காலனிக்கு அருகில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இங்கு வீட்டுமனை வழங்குவதுடன்,பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story